Saturday, 8 September 2018

தங்கைகள் விற்பனைக்கு




தங்கைகள் விற்பனைக்கு:-

முகத்திற்கு சாயம் பூசி பயமுறுத்துகிறாள்
அதனால் விற்பனைக்கு,

சமைத்த உணவை என்னை வைத்தே சோதிக்கிறாள் நானென்ன சோதனைக் கூடமா இவளுக்கு
இதனால் விற்பனைக்கு,

தின்பண்டத்திற்கு அண்ணனை அடகு வைத்து விடுவாள்
அதனால் விற்பனைக்கு,

அழுக்கு முகம் காட்டி பயமூட்டுகிறாள்
அதனால் விற்பனைக்கு,

ஊரெங்கும் இவள் பேச்சு
என் பேச்சோ காற்றில் போச்சு
இதனால் விற்பனைக்கு,

அண்ணனென்றும் பாராமல் அடிமை போல நடத்துறா
இதனால் விற்பனைக்கு,

அசைவந்தா தின்ண மாட்டா
ஆனா புழு கொன்று பட்டாடை கேட்பாளே
இதனாலும் விற்பனைக்கு,

ஏலம் எடுக்க வந்தவரே ஆரம்ப விலை ஒரு பைசா மட்டுமே
தள்ளுபடியும் உண்டய்யா தயங்காம கேளுங்களேன்!....

தனிமையும் அழகே

தனிமை பல காயங்களுக்கு மருந்து என்பதை அறியாதவன்  எவனோதான் சொல்லியிருப்பான் தனிமை கொடியது என்று...

தனிமை அழகானது இயற்கையோடு பேசிப்பார்,

தனிமை அழகானது
பிடித்தவர்களை பிரிந்த நேரத்தில் அவர்களின் நினைவுகளை அசை போட்டுப்பார்,


தனிமை அழகானது
தனிமை தனிமையையே துணை கொண்டு தனிமையாய் வாழும்போது....

Friday, 7 September 2018

தெயவத்தானாகாதெனினும்


எட்டுக் கால் பூச்சி ஏட்டுக்கல்வி படிக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது தன் தாயிடம் இருந்து கற்றுக்கொள்கிறது....
தான் கட்டும் வீடு எப்போது வேண்டுமானாலும் காலியாகலாம் எனத் தெரிந்தும் தன் முயற்சியை மட்டும் கைவிடுவதில்லை.
ஒரு முறை இருமுறை அல்ல தன் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு முறை வீழும் போதும் தொடர்ந்து அதே வேகத்தோடு மீண்டும் தன் இருப்பிடத்தை கட்டமைக்கிறது அதற்குத் தெரியும் இதுவும் நிரந்தரமல்ல என்று ஆனால் சோர்ந்து போவதில்லை.
ஆனால் அறிவுள்ள மனிதர்களோ சிறு விசயத்திற்கும் சோர்ந்து போய் மூலையில் முடங்கி விடுவதும்,தன் வாழ்க்கையையே முடக்கிக் கொள்வதும் தற்காலத்தில் அதிகமாகிக் கொண்டு வருகிறது...

எட்டுக்கால் பூச்சியின் போராட்டம்தான் தன் இருப்பை தக்கவைக்கிறது அஃறிணை கூட சோர்ந்து போவதில்லை...

அறிவுள்ள நாம் சோர்ந்து போகலாமா முயற்சிகள் மட்டுமே தன் இருப்பை உறுதிப்படுத்தும்...முயற்சிகள் முடங்கும் போது நீயும் முடமாக்கப்படுவாய்...
எந்த தோல்விகளாலும் உன்னை முடமாக்க முடியாது முயன்று கொண்டிருக்கும் வரையில்...

 அஃறிணைகளிடம் இருந்தும் கற்றுக்கொள்ள ஆயிரம் உண்டு....

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்

Wednesday, 5 September 2018

அஃறிணை காதல்

தேனைத் திருட வந்த பட்டாம் பூச்சி தேன் தீர்ந்தும் பறக்க மனமில்லாமல் போனது பூவின் மீது கொண்ட காதலால்!!!!!!

Saturday, 1 September 2018

அப்பத்தா

அப்பத்தா ஒரு ஆச்சர்யம்...

பேரன் பந்து வெளயாடிட்டு வந்து படுத்துருக்கானு காலமுக்கி விடுவயே...

அம்மாக்கு தெரியாம தேன்முட்டா ஏலந்தவட வாங்கிக்கனு  25பைசா கொடுப்பயே...

நா செருப்ப தொலச்சா ஊரெல்லாம் தேடுவயே...

வெறகடுப்பு எரிச்சு பேரனுக்கு
கருப்பட்டி காப்பி வப்பயே...

பேரன யாரச்சும் திட்டிப்புட்ட
வெளக்கமாற எடுத்துட்டு சண்டைக்குத்தா போவாளே...

இந்தக் கிழவி பையன கெடுத்து போட்டானு அம்மா திட்டுனாலும் சிருச்சுக்குட்டே போவாளே...

மத்தியான சோத்துக்கு கழி கிண்டி நீ கொடுக்க  பக்குவமா அத புசிக்க....

ஒரு கொய்யா கெடச்சாலும் நீ திங்கமா கொசுவத்துல முடிஞ்சு பேரனுக்குனு கொண்டு வரவளே...

மாரப்பு போடமாட்டா
ஆனாலும் மானத்தோடு வாழ்ந்திருந்தா....

அப்பனுக்கு ஆத்தா
இந்த பேரனுக்கு அப்பத்தா!.....




Friday, 31 August 2018

லோலாக்கு


ஊஞ்சல் கட்டி உனை ஆட்ட விரும்பினால்
உன் காதில் ஊஞ்சல் கட்டி லோலாக்கு ஆடுகிறது...

ஆடி மாதம் மட்டும்தானே ஊஞ்சல் கட்டி ஆடுவார்கள்...

அந்த லோலாக்கு மட்டும் வருடம் முழுவதும் ஆடுதே உன் காதில்....
அதற்கு மட்டும் ஆடித் தள்ளுபடி ஆண்டு முழுவதுமோ....


இது என்ன ஓர வஞ்சனை....

Thursday, 30 August 2018

கண்ணுறங்கு தங்கச்சி

அண்ணன் கம்மங்கூழு வாங்கித் தாரேன்
கண்ணுறங்கு தங்கச்சி....

ஏந்தங்கச்சி ஒடம்பு வர
எருமத் தயிரு வாங்கி வாரேன் 
கண்ணுறங்கு கண்மணியே...

சிணுங்காம கண்ணுறங்கு 
சீமைக்குத்தா கூட்டிப் போறேன்....

சீர்வரிசை வண்டியில கொண்டு வாரேன் 
சிலுத்துக்காம கண்ணுறங்கு...

பஞ்சுமிட்டாய் வாங்கித்தாரேன்
பயக்காம கண்ணுறங்கு...

பாட்டி வடை சுட்ட கதை தெரியலயோ
காகம் அதை தூக்கிப்போன கதையும் தெரியலயோ
அழகாக சொல்லி தாரேன்
அழுகாம கண்ணுறங்கு ...

வானவில்ல கொண்டு வந்து வளையல்தா செஞ்சு தாரேன்
வஞ்சிக்கொடியே நீ கண்ணுறங்கு...

கண்ணுறங்கு கண்ணுறங்கு 
ஏன் கண்ணே கண்ணுறங்கு
அண்ணன் அழகாக பாத்துக்குறேன்
அம்சமாக கண்ணுறங்கு...

காலேசு போறவளே தங்கச்சி, ராமன்கள் பலருண்டு
ராவணன் நான் மட்டும்தான்.....

ராமன்கள் வருத்தினாலும்
கேட்க அண்ணன் ராவணனுண்டு
கலங்காம கண்ணுறங்கு....

கண்ணுறங்கு தங்கச்சி
கண்ணுறங்கு.....

            -  மா.தினேஷ்குமார்









Wednesday, 29 August 2018

பத்தினி

தெருக்குழாயடியில் பத்தினிச் சண்டை
யார் கண்ணகி என்பதில்
அவர்கள் அறியவில்லை போலும் தன் கணவன் கோவலன் என்பதை!....

Wednesday, 11 July 2018

கவிதைனும் சொல்லலாம்...

உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொன்னவர்கள்
அந்த தண்ணீரிலும் உப்பு உள்ளது என்பதை அறியலயோ!

பட்டுப் புழுவைக் கொன்று பட்டாடை செய்து
அந்த பட்டாடையில் பட்டாம்பூச்சியை பதிக்க வேண்டுமோ?
கண்ணீர் அஞ்சலியோ!..


வன்முறையாளனுக்கும் காந்தியை பிடித்துப் போகிறது 
பணத்தில் இருப்பதால்...


சுற்றுச் சூழலை காக்க போராடினால் தேசத்துரோகினு சொல்றாங்க
அப்ப பாபர் மசூதிய இடிச்சவங்க யாரு பாரதமாதாவே???..

Tuesday, 10 July 2018

ராவணாயனம்

அடிப் பெண்ணே தினம் தினம் உன்னை தீக்குளித்து கற்பை நிருபிக்கச் சொல்ல நான் ஒன்றும் ராமன் இல்லையே...

Sunday, 8 July 2018

அவளும் பூவும்

வண்டுகளுக்கு உன் மேல் கோபம்
பூவை நீ பறித்து சூடிக்கொள்வதால்
பலருக்கு வண்டுகள் மேல் கோபம்
உன்னையே சுற்றுவதால்!....

செடியை விதவையாக்கிவிட்டு
நீ சுமங்கலியாகிறாயே...

வண்டுகள் பிரம்மச்சாரியாய்
பூக்களெல்லாம் உன்னை விரும்புவதால்!...

Saturday, 7 July 2018

தங்கச்சி காவியம்

பேசுடீ தங்கச்சி...

பேசி பேசியே வளர்ந்த புள்ள
பேசாம போறியே நியாயமா..
பேசாம நீயிருந்தா புத்தி பேதலிச்சு போகுதம்மா...
என்ன கொற இருந்தாலும் அண்ணன
ஏலத்துல விட்டுடாத....
கன்னத்துல அடிச்சுப்போடு ஆன அண்ணன
காலாவதி ஆக்கிடாத...


தங்கச்சி காவியம்

முற்றும் துறந்தானோ புத்தன் என்னவோ
உன் போல் தங்கை கிடைக்காத விரக்தியில்...

உன்போல் தங்கை இல்லையோ ஏன்னவோ வைரமுத்திற்கு
இருந்திருந்தால் கருவாச்சி காவியமா எழுதியிருப்பார்
தங்கச்சி காவியமல்லவா படைத்திருப்பார்...

நாத்திகனுக்கும் வேண்டுதல் வந்துவிடும் உன்போல் தங்கை வேண்டுமென்று...

வால்மீகி காவியத்தில் சீதை நீயென்றால் இனி எத்தனை ராமன்கள் வில் வளைத்து விரும்பினாலும் எந்த ராமன்களுக்கும் உன்னை விட்டுத்தரப்போவதில்லை...
   
                                         - அன்பு அண்ணன்

Dubmash

ரத்தக்கண்ணீர்...

ஆன்மீகம் ஆகாத அறிவியலே

ஆன்மீகம் ஆகாத அறிவியலே....